Wednesday, September 18, 2013

நெகிழிப் பைகள், நம்மை நெகிழ வைக்க இல்லை.

"கை வீசம்மா, கை வீசு,
கடைக்கு போகலாம் கை வீசு"

என அன்று பாடல் பாடி மகிழ்வித்த அம்மாக்கள், பின்னாட்களில் தன் பிள்ளைகளை கடைக்கு அனுப்பும் போது, "மறக்காமல் பை எடுத்துக் கொண்டு போ" என்று கூறத் தவறவில்லை.

அன்று "கை வீசம்மா" பாடல் கேட்டு வளர்ந்த, இன்றைய அம்மாக்களும், அப்பாக்களும், இன்று அவரவர் பிள்ளைகளுக்கு, தான் கேட்ட பாடலை சொல்லாவிடினும், அதை நடைமுறைபடுத்திக் காட்டிவிட்டனர். "பை" எடுத்துக் கொண்டு பைய(மெதுவாக) கடைக்கு சென்று வந்த அந்தக் காலம் இன்று இல்லை எனக் கூறிக்கொண்டு, நெகிழிப் பைகளை வாங்கி, பிறகு வீசி எறிகின்றனர். இதைப் பார்த்து வளரும் இன்றைய குழந்தைகள்,

பை வீசம்மா பை வீசு
கடைக்கு போய்வந்தா, (நெகிழிப்)பை வீசு

என்று நினைத்துக் கொண்டுள்ளனர்.

நெகிழி எனும் பொருளால், உலகம் பட்ட, படுகின்ற, படப்போகும் பாடு, சொல்லிலடங்கா. எனவே, கை வீசிக் கொண்டு காற்று வாங்க வேண்டுமானால் போகலாம், கடைக்கு போகக் கூடாது என்று அனைவரும் அறிதல் நலம்.

அந்தப் பாடலையும், பின்வருமாறு மாற்றிப் பாடலாம் என நான் நினைக்கிறேன்...

(துணிப்)பை வீசம்மா பை வீசு
கடைக்கு போகலாம் பை வீசு
பலசாமான் வாங்கலாம் பை வீசு
இயற்கையை மீட்கலாம், பை வீசு

அன்பன்,
முத்து